சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா ஆக., 1ல் துவக்கம்; ஆக., 5 வரை பக்தர்கள் தரிசிக்கலாம்
பதிவு செய்த நாள்
30
ஜூலை 2024 02:07
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 1 முதல் துவங்கி ஆகஸ்ட் 5 வரை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு துறையினர் செய்துள்ளனர். இக்கோயிலில் ஆகஸ்ட் 1ல் பிரதோஷம், ஆகஸ்ட் 2ல் சிவராத்திரி வழிபாடு, ஆகஸ்ட் 4ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக 5ந்தேதி வரை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்காக அரசு துறையினர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். அறநிலையத்துறை சார்பில் 5 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், தேவையான குடிநீர்,மின்விளக்கு வசதியும் செய்துள்ளனர். மலையேறும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய வசதியாக ஒரு வழி பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பிலாவடி கருப்பசாமி கோயிலில் இருந்து சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் சுந்தர மகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் திரும்பும் வகையில் மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், தேனி, மதுரை, கோவில்பட்டி, தென்காசி போன்ற தொலைதூர நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அடிவாரத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் அடிவாரம், மந்தி தோப்பு, மாவூத்து இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க தேவையான கருவிகள் மருந்துகள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தானிப்பாறை அடிவாரத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிணற்று தண்ணீர் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் துறை சார்பில் 2 ஏ. டி.எஸ். பி. க்கள் தலைமையில் 1500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வாகனங்களை நிறுத்த ஏழு இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை விருதுநகர், மதுரை மாவட்ட அரசு துறையினர் செய்துள்ளனர்.
|