பதிவு செய்த நாள்
02
ஆக
2024
07:08
சென்னை, நங்கநல்லுார், தில்லை கங்கா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில். இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் சி.ஜே.விஜயகுமார். சிறந்த கருமாரி பக்தர். திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு பலமுறை நடைபயணமாக மேற்கொண்டு அம்மனை தரிசித்து அருளைப் பெற்றவர்.
கட்டுமான தொழில் நடத்தி வந்த அவர் தற்போது ஆலயம்அமைந்துள்ள இடத்தை வாங்கி, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தீர்மானித்தார். பத்திரப் பதிவு செய்வதற்கு முன்தினம், அதற்கான சிந்தனையில் ஈடுபட்டிருந்தபோது, பின்புறம் ஒரு தெய்வீக குரல் ஒலித்தது. திரும்பி பார்த்தபோது யாரும் இல்லாததை கண்டு அதிசயித்தார். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தபோது, மீண்டும் அதே தெய்வீக குரல், அசரீரியாக, அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைக்கும் படி கட்டளையிட்டது. அந்த அசிரீரி தேவி கருமாரி அம்மன்தான் என உணர்ந்து மெய்சிலிர்த்தார்.
தேவியின் கட்டளைப்படி கோவில் கட்டும் பணியை துவக்கினார். எதையும் தாராளமாக பெரிய அளவில் செய்யும் விஜயகுமார், தேவி கருமாரியம்மனுக்கு பிரம்மாண்டமான கோவில் உருவாக்கினார். கடந்த, 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அக்கோவிலுக்கு காஞ்சி மகாபெரியவர் அனுக்கிரஹப்படி, தவத்திரு தேவி உபாசகர் ராம்தாஸ் சுவாமிகள், காளிகாம்பாள் கோவில் சிவாச்சாரியார் சாம்பமூர்த்தி, வைகானச ஆகம பட்டாச்சாரியார் ராகவன் உள்ளிட்டோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதையடுத்து, கோவிலின் கிழக்கே ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, 2002ல் இரண்டாவது கும்பாபிஷேகம் விமர்சையாகநடத்தப்பட்டது. அப்போது, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் நிர்மாணிக்கப்பட்டன.
கோவிலின் அமைப்பு
இக்கோவிலில் தேவி கருமாரியம்மன் மூலவராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோவிலக்கு கிழக்கு, தெற்கு புறங்களில் கோபுரம் அமைந்துள்ளது. கோவிலில் விநாயகர், தாட்சாயினி, வைஷ்ணவி, பிராம்மணி, துர்கை உடன் ஆதியில் அமைந்த தேவி கருமாரி அம்மன் அருள்பாலிக்கின்றனர். அம்மனின் வலதுபுறம் விநாயகர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதி உள்ளது. இடதுபுறம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், துர்கை அம்மன் அருகில் நாக பிரதிஷ்டை செய்த அரசமரம் உள்ளது.
அம்மனின் முன்புறம் இடதில் நவக்கிரஹங்கள் உள்ளன. வலது புறத்தில் ஆஞ்சநேயர், கண்ணாடி பெட்டகத்துள் தேவி கருமாரி அம்மன் அருள்பாலிக்கிறாள்.
ஆடி மாத சிறப்பு
ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமையும் பக்தர்கள் பொங்கலிட்டும், மாவிளக்குமாடு போட்டும் வழபாடு செய்து வருகின்றனர். ஆடி மாத கடைசி ஞாயிறு அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
நவராத்திரி
நவராத்திரி பண்டிகை ஒன்பது நாளும் அம்மனை ஒன்பது விதமாக அங்காரங்களுடன் அலங்கரிப்பர். இரவு லட்சார்ச்சனையும் நடத்தப்படுகிறது.
லட்ச தீபம்
இக்கோவிலில், 2000ம் ஆண்டு முதல் பிரார்த்தனை லட்ச தீபம் தேவி கருமாரியம்மன் எதிரில் மாலை 6:00 மணி முதல் ஏற்றப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அம்மனிடம் வேண்டி விளக்கேற்றுவர்.
பவுர்ணமி திருவிளக்கு பூஜை
கருமாரிதாசர் ராமதாஸ் சுவாமிகளால் பவுர்ணமி விளக்கு பூஜை துவக்கப்பட்டது. ஒவ்வொரு பவுர்மணி அன்றும் மாலை 6:00 மணிக்கு மேல், 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. விளக்கு பூஜைக்கு முன் அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று, 108 பால்குடம் நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருவீதி உலா
தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை மாதம் முதல் தேதி, விநாயகர் சதுர்த்தி, சம்வத்ஸர உற்சவம், நவராத்திரி உற்சவம், விஜயதசமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவ தினம், வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி ஆகிய நாட்களில் அந்த உற்சவர்கள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6:30 – 11:00 மணி. (வெள்ளி-நண்பகல் 12:00 மணிவரை)
மாலை 5:30– 3:00 மணி.(செவ்வாய் மாலை 3:00- – 4:30 மணி வரை)
தொடர்புக்கு
044- – 2260 2499.