கோவை ; ஆடி வெள்ளி முன்னிட்டு, கோவை பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.
ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி கோவை வரதராஜபுரம் மேடு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில் பத்ரகாளி அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில்மேடு ஸ்ரீ ஆதி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மசக்காளிபாளையம் ஸ்ரீ வீரமாச்சி அம்மன் கோவில், கோவை தடாகம் ரோடு ராயப்பாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம் ஸ்ரீ சீர்காழி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
துடியலூர் ஐடிஐ பின்புறம் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். கோவை ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.