அவிநாசி பெருமாள் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2024 10:08
அவிநாசி; ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அவிநாசி ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலையில் மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலையில் திருக்கல்யாண உற்சவ நிகழ்வில் காப்பு கட்டுதல், புருஷ சுத்த ஹோமம், பட்டு வஸ்திரங்கள் அணிதல், கன்யாதானம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டு, மாலை மாற்றுதலுடன் திருமாங்கல்ய தாரணம் நடந்தது. தொடர்ந்து, வாரணம் ஆயிரம் உபசாரம், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அனுப்பர்பாளையம்; அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம் விழாவையொட்டி, பெருமாளுக்கு மஹா திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். காலை, 11:45 மணிக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.