பதிவு செய்த நாள்
10
ஆக
2024
10:08
சென்னை; சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா அஸ்வமேத மகா மண்டபத்தில், பிரம்ம சபா டிரஸ்ட் சார்பில், பரனுார் கிருஜ்ணப்ரேமி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம், நேற்று துவங்கியது. வரும் 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஹரி அண்ணா எனும் வெங்கடகிருஷ்ண சுவாமிகள் முன்னிலையில், நேற்று துவங்கிய ஜெயந்தி மகோற்சவத்தில், அண்ணா கிரந்த ப்ரவசனத்தை, ‘ஸ்ரீ பக்தகோலாஹலன் ஸ்தோத்ரம்’ என்ற பெயரில் நாகராஜு சர்மா நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து, மருதாநல்லுார் சத்குரு சுவாமிகளின் நாமசங்கீர்த்தனம் நிகழ்ந்தது. நேற்று மாலை, ‘லகுஸ்தோத்ர மாலா’ எனும் தலைப்பில், அண்ணா கிரந்த ப்ரவசனத்தை ஸ்ரீதர சர்மாவும், சங்கராச்சார்யார் என்ற தலைப்பில் பக்த விஜய பிரவசனத்தை சுபத்ராவும் வழங்கினர். பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இன்று முதல் தினசரி நிகழ்வாக, காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை ப்ரேமிக மஹிளா மண்டலியினரால், ஸ்ரீவைஷ்ணவ சசம்ஹிதா பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 6:30 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை ப்ரபோதனம், அண்ணா கிரந்த பிரவசனம், நாமசங்கீர்த்தனம், பூஜை நடக்கிறது. தினசரி மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை யக்ஞராம சர்மா மற்றும் முரளீதர சர்மா குழுவினரால் அஷ்டபதி மற்றும் ப்ரேமிக கிரந்த கீர்த்தனங்கள் நிகழ்த்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிவரை விஷ்ணுசகஸ்ரநாமம், அண்ணா கிரந்த ப்ரவசனம், டோலோற்சவம் நடக்கிறது. மகோற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக, 11ம் தேதி கன பாராயணமும், 15ம் தேதி உஞ்சவிருத்தி ராதா கல்யாணமும் நடக்கிறது.