பதிவு செய்த நாள்
10
ஆக
2024
11:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மனுக்கு ஆடித் திரு விழாவையொட்டி, நேற்று காலை அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும் நடந்தது. பின், இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி தேவி அலங்காரத்தில் எழுந்தருளிய கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள், அம்மனுக்கு சேலை சாற்றியும், கற்பூர தீபாராதனை காண்பித்தும் வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு, அம்மன் வர்ணிப்பு நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை புதுப்பாளையம் தெருவாசிகள் செய்திருந்தனர். பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலனம் சார்பில், காஞ்சிபுரம் சேக்குபேட்டை சாலியர் தெற்கு தெருவில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில், மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், 5:30 மணிக்கு ஊரணி பொங்கலும், மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்த வெளி அம்மன், ஆடி நான்காவது வெள்ளியையொட்டி, புற்று மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு, அன்னை ரேணுகாம்பாள், வேப்பிலைக்காரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.