மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் ஆடி சுவாதி மகாருத்ர யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 10:08
புதுச்சேரி; ஆடி மாத சுவாதி நட்சத்திர நாளில், சிவபெருமான் தன் திருவடியில் சுந்தரமூர்த்தி நாயனாரை சேர்ந்ததையொட்டி மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் மகா ருத்ரயாகம் நடந்தது.
சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் எனும் சுந்தரரர். இவர் பாடிய தேவாரங்கள், 7ம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நுாலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அனைவரையும் அடியாராக ஏற்றுக்கொண்ட சிவன், சுந்தரரை தோழனாக ஏற்றுக்கொண்டார். ஓர் ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரரை சிவன் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டார். இதனையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் உள்ள சங்கிலி நாச்சியார் – பரவை நாச்சியார் கோவிலில் மூன்று நாள் ஆடி சுவாதி மகாருத்ர யாகம் கடந்த 9ம் தேதி 9:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரு நாட்கள் நான்கு கால மகாருத்ர யாகம் நடந்தது. மூன்றாவது நாளான நேற்று காலை 10:00 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு மகாருத்ர யாகம் நிறைவு பெற்றது. 12:00 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் உள்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி நாயனார் சாரிடபிள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.