பதிவு செய்த நாள்
14
ஆக
2024
10:08
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான இன்னம்பூர் சுகுந்தகுந்தளாம்பிகையம்மன் சமேத எழுத்தறிநாதர் கோவில் உள்ளது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவிலின் வடமேற்கு மூலையில், பரிவார சுவாமிகளுடன், அரை அடி உயரம் கொண்ட சிவலிங்கம், விநாயகர் கற்சிலை இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், கோவில் சிவாச்சாரியார் முத்துக்குமார், வழக்கம் போல பூஜை செய்ய சென்ற போது, அங்கிருந்த அரை அடி உயரம் கொண்ட சிவலிங்கம் மற்றும் விநாயகர் சிலை மாயமாகி இருந்தது தெரிந்தது. கோவில் நிர்வாகத்தின் புகார்படி, சுவாமிமலை போலீசார் நேற்று காலை, கோவிலுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது; சிவலிங்கம் கற்சிலை கிடைக்கவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.