பதிவு செய்த நாள்
13
ஆக
2024
06:08
பாலுார் பதங்கீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளரும் மரங்கள்; அகற்றுமா அறநிலையத்துறை
மறைமலை நகர்; காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில் ரயில்வே கேட் அருகில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பதங்கீஸ்வரர் உடனுறை பிரம்மராம்பிகை கோவில் உள்ளது. இக்கோவில், தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பிரகாரத்தில் நால்வர், காலபைரவர், சூரியன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனிச்சன்னிகள் உள்ளன. இக்கோவிலில், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை விமரிசையாக நடைபெறும். தற்போது, கோவில் வளாகம் மற்றும் கோவில் கோபுரங்கள், சுற்றுச்சுவர்களில் அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவில் பூஜைகள் நடத்தப்பட்டாலும், கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் வளந்து உள்ளன. இது கோவில் கட்டடத்தின் உறுதித்தன்மையை குலைக்கும் வகையில் உள்ளது. கோவில் சுவர்களில் உள்ள பழங்கால கல்வெட்டுகள் சேதமடையவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், பிரகாரத்தின் உள்ளே அதிக அளவில் களைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இது, புதிதாக வரும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவிலின் பின்புறம் சூரிய புஷ்கரணி குளம் பயன்பாடு இல்லாமல், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இக்கோவிலில் உழவார பணிகள் மேற்கொண்டு, கோவிலில் உள்ள களை மற்றும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல குளத்தை துார் வாரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.