பதிவு செய்த நாள்
14
ஆக
2024
01:08
மறைமலை நகர்; செங்கல்பட்டு பாலாற்றங்கரையை ஒட்டி பாலுார், புலிப்பாக்கம், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், தாசரிகுன்னத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பாலாற்றங்கரை நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச் சின்னங்கள் மலையடிவாரத்திலும், குன்றுகளிலும் உள்ளன. இதில், தாசரிகுன்னத்துார் மலையடிவாரத்தில், பெரிய பாறையில் பழமையான உரல் மற்றும் மனித காலடி தடம் இருந்து வந்தது. இது, சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும்பாலானோருக்கு தெரியும். இந்நிலையில், நேற்று முன்தினம் வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மாடுகளை தேடி வனப்பகுதிக்கு சென்றனர்.
உரல் இருந்த இடத்தில், சிவலிங்க உருவத்தை கண்ட இளைஞர்கள், வெண்பாக்கம் மக்களிடம் இதனைத் தெரிவித்தனர். வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சிவலிங்க உருவத்திற்கு அபிஷேகம் செய்து, ருத்திராட்ச மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபட்டு சென்றனர். வெண்பாக்கம் கிராமத்தில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வில்லியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வெற்றித் தமிழன் கூறியதாவது: தாசரிகுன்னத்துார் வனப்பகுதியில், பெரிய பாறையில் செதுக்கிய கால்தடம் மற்றும் பழங்கால உரல் மட்டும் இருந்து வந்தது. இது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் தொன்மை தேடி பயணத்தில் கண்டோம். தற்போது, யாரோ மர்ம நபர்கள், இந்த உரலில் கருங்கல்லால் ஆன குழவியை நிற்க வைத்துஉள்ளனர். அதனால், இது பார்ப்பதற்கு சிவலிங்கம் மற்றும் ஆவுடை வடிவில் தெரிகிறது. இதை புதிதாக கண்ட இளைஞர்கள், சிவலிங்கமென நம்பி வழிபட்டுள்ளனர். தங்களை சுற்றியுள்ள கிராமங்களின் வரலாறு கூட இளம் தலைமுறையினருக்கு தெரியாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இந்த உரல், புதிய கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சின்னங்களை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதிகளில், தொல்லியல் துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில், 5 கி.மீ., தொலைவில் வடக்குப்பட்டு கிராமத்தில் ஆகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.