திருச்செந்தூர்: திருச்செந்தூர் ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவர்த்தன பூஜை நடந்தது. திருச்செந்தூரில் முதன்முறையாக புராண காலங்களில் உள்ள நிகழ்வுகளை நிகழ்ச்சியாக்கி ருக்மணி சத்ய பாமா கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோபியர், கோபிகைகளுடன் நகரின் மத்தியில் அமைந்துள்ள கோயிலில் கோவர்த்தன மலையாகிய கிருஷ்ணருக்கு மக்கள் அனைவரும் சேர்ந்து பலவகையான இனிப்பு வகைகளை நெய்வேத்தியம் செய்து அவர்கள் கைகளாலேயே நெய் தீபம் ஏற்றி உலக நன்மைக்காக கோவர்த்தன பூஜை நடந்தது. இந்த பூஜை செய்வதன் மூலம் மாதம் மும்மாரி பெய்து, செல்வ செழிப்புடன் எல்லோரும் கிருஷ்ணரைப் போலவே அழகு, செல்வம், பலம், புகழ் போன்ற பல்வேறு பேறுகளைப் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இதன்படி கிருஷ்ணன் கோயிலில் கோவர்த்தன பூஜை துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளின் கோலாட்டம், கிருஷ்ண கானசபா குழுவினரின் பக்தி இன்னிசைகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். முதல் நாள் பூஜையில் யாதவ மகாசபை தலைவர் நம்பி யாதவ், நடராஜன், நாராயணன், மணிகண்டன் மற்றும் இஷ்கான் அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.