பதிவு செய்த நாள்
17
நவ
2012
10:11
ஈரோடு: முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு, கண்ணை பறிக்கும் வகையில் ராஜ அலங்கார உடைகள் தயாரித்து, பூஜா ஸ்டோர்களில் விற்பனைக்கு வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் கந்த சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. 18ம் தேதி அன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. முன்னதாக ஒவ்வொரு கோவில்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனால், கோவிலில் பூஜைக்கு தேவையான பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும் முருகனுக்கு அணிவிக்கப்படும் பாசியால் ஆன ராஜ அலங்கார ஆடைகள், கிரீடம், தொப்பி, அஷ்தம் பாதம், பட்டுத்துணி என அனைத்து பொருட்களும் தற்போது நன்கு விற்பனையாகிறது. ஈரோடு மளிகை வர்த்தக சங்க செயலாளர் துவாரகநாதன் கூறியதாவது: கோவில் விசேஷம் எதுவாக இருந்தாலும், விபூதி, சந்தனம், குங்குமம் ஆகிய மூன்றும் பூஜை பொருட்களில் முக்கிய இடம்பெறும். விபூதி பழனியில் இருந்தும், சந்தனம் கும்பகோணத்தில் இருந்தும், குங்குமம் சென்னையில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. விபூதி கிலோ, 40 ரூபாய்க்கும், குங்குமம், 170 ரூபாய், சந்தனம், 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆடி, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். குறிப்பாக தை மாதம் வியாபாரம் அதிகமிருக்கும். தற்போது முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு தேவையான ராஜா அலங்கார உடைகள் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. குழந்தை வரம் வேண்டியிருப்பவர்கள் இதுபோன்ற உடைகளை முருகனுக்கு காணிக்கையாக செலுத்துவர். வெல்வெட் துணி, பாசி, ஜமுக்கி உள்ளிட்ட பொருட்களால் ராஜ அலங்கார உடைகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு அடி முதல் நான்கு அடி உயரம் வரை ராஜ அலங்கார உடைகள் விற்பனைக்காக வருகின்றன. ஒரு அடி உடை செட் ஒன்று, 650 ரூபாய், இரண்டு அடி, 900 ரூபாய், மூன்றடி, 1,500 ரூபாய், நான்கடி, 1,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலம், சிவப்பு, மாம்பழ கலர், ஆரஞ்ச் உள்ளிட்ட கலர்களில் ராஜ அலங்கார உடைகள் உள்ளன. முருகனின் தலைப்பாகையாக பாசியில் தயாரித்த கிரீடம் விற்பனைக்கு வந்துள்ளது. சிறியது முதல் பெரிய சைஸ் வரை விற்பனைக்கு வந்துள்ளது. 80 முதல், 400 ரூபாய் வரை கிரீடம் விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.