விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ம் தேதி வருகிறது. எனவே, விநாயகர் சிலைகளுக்கு, ‘டிமாண்ட்’ ஏற்பட்டுள்ளது. நகரின் பல ரோடுகளில் விதவிதமான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நகரின் மாவள்ளி ரோட்டில் விற்பனை அமோகமாக நடக்கிறது. தங்களுக்கு விருப்பமான சிலைகளை பலரும், ‘புக்கிங்’ செய்து உள்ளனர். பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள், எளிதில் மண்ணில் கரைவதில்லை. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை. இத்தகைய சிலைகள் தயாரிப்பது, பயன்படுத்துவது, சேகரித்து வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு மாநகராட்சியின் விழிப்புணர்வால், தற்போது பி.ஓ.பி., சிலைகளை விட, களிமண் சிலை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். வியாபாரிகளும், மண் சிலையை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கின்றனர். கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை 20 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. ஒரு அடி முதல் 7 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 100 முதல் 35,000 ரூபாய் வரை, விலை நிர்ணயித்துள்ளனர். மல்லேஸ்வரம், சிவாஜி நகர், கோரமங்களா, யஷ்வந்த்பூர், எம்.ஜி.ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. வித்தியாசமான வடிவங்களில் மனதை ஈர்க்கின்றன.