ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலவுக்கால் நிறுவும் விழா; சிரவை ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 05:08
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலவுக்கால் நிறுவும் விழா நடந்தது. சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் விழாவுக்கு தலைமை வகித்தார். தேசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, புதியதாக கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கோவிலில் மூலவர் மற்றும் அம்மன் சன்னதி முன்பு மண்டபத்தின் நுழைவாயில் ஆகிய பகுதிகளில் நிலவுக்கால் நிறுவும் விழா நடந்தது. கோவை சிரவணபுரம் கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் நிலவுக்கால் நிறுவும் விழாவில் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. மூன்று நிலை ராஜகோபுரம் அமைய சிறப்பு யாக வேள்விகள், பூஜைகள் நடந்தன. யாக வேள்விகளை கோவில் அர்ச்சகர் சிவ தினேஷ் மற்றும் சிவனடியார்கள் செய்தனர். நிகழ்ச்சியில், சண்முகசுந்தரம் குடும்பத்தினர் மற்றும் ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகிகள், திருக்கோவில் திருப்பணி நிர்வாக குழு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.