தொண்டாமுத்தூர்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், உடைந்து கிடக்கும் நவகிரக தூணை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். மலைக்கு செல்லும் படிக்கட்டின் அடிவாரத்தில், சுமார், 50 ஆண்டுகளுக்கு முன், 12 ராசிகளின் சின்னம், 27 நட்சத்திரங்களை தாமரை இதழ் வடிவில் கூடிய, நவகிரக தூண் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், நவக்கிரக தூணை வழிபட்டு வருகின்றனர். இந்த தூணின் கீழ் பாகத்தில், 12 ராசிகளின் சின்னமும், அதன்மேல், தாமரை மலர் விரிந்த நிலையில் மேல் நோக்கியும், அதன்மேல், நவகிரக தெய்வங்களும், அதற்கு மேல் உள்ள தூணில், 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் வகையில், சிறிய தாமரை இதழ்களும் உள்ளது. தூணில் மேல்புறத்தில், கீழ் நோக்கி விரிந்த தாமரை மலரும், தூணின் உச்சியில் அன்னப்பறவையும் இருந்தது. இத்தனை சிறப்புகள் அடங்கிய நவகிரக தூணின் மேல் பாகம், கடந்தாண்டு உடைந்து விழுந்தது. இதில், தூணின் உச்சியில் இருந்த அன்னப்பறவை, அதன்கீழ் இருந்த விரிந்த நிலையில் கீழ்நோக்கிய தாமரை மலரும் இரண்டாக உடைந்தது. இந்த உடைந்த பாகங்கள், நவகிரக மண்டபத்தின் வெளிப்புறத்தில் முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்த தூண் உடைந்துள்ளதை, புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் செயல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்," நவகிரக தூணை மீண்டும் பழையபடி புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் புனரமைக்கப்படும்,"என்றார்.