பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், உலக நலன் வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அகில பாரதிய சன்யாசி சங்கத்தின் நிறுவனர் சுவாமி ராமானந்த மஹராஜ் ஆசி வழங்கி பேசுகையில்," வேற்றுமைகளை களைந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவும், உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை நடக்கிறது. தீப ஒளி இருளை அகற்றி, ஒளியை தருகிறதோ, அதைப்போல, மக்கள் தங்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி, ஒளியை ஏற்றவேண்டும். கூட்டு பிரார்த்தனை அதிக பலன் தரும். அதனால், அனைவரும் உலக நன்மையை வேண்டி பிரார்த்தனை செய்வோம்," என்றார். ஆசிரம தலைவர் சுவாமினி சிவ ஞானப்பிரியா ஆசியுரை வழங்கினார். திருவிளக்குகளுக்கு, குங்குமம், புஷ்பத்தால், பெண்கள் அர்ச்சனை செய்தனர். தீபம் காட்டி வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முடிவில், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.