கல் மண்டபத்துடன் ஆற்றில் புதைந்த விநாயகர் சிலை மீட்பு; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2024 11:08
வீரபாண்டி; சேலம் அருகே உத்தமசோழபுரம், திருமணிமுத்தாற்றின் கரையில், பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் உள்ளது. இதன் எதிரே ஆற்றுக்குள் பெரிய பாறையில் புடைப்பு சிற்பமாக விநாயகர் சிலை வடித்து, அதன் மீது நான்கு கால் கல் மண்டபம் எழுப்பி வழிபாட்டில் இருந்துள்ளது. 50 ஆண்டுக்கு முன்புவரை, பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு, விநாயகரை வணங்கிய பிறகே, கரபுரநாதர் கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கரபுரநாதர் கோவில் சித்திரை விழா ஒரு பகுதியாக, ‘பிட்டுக்கு மண் சுமக்கும்’ லீலை விநாயகர் கோவில் முன்தான் நடந்து வந்துள்ளது. ஆற்றில் கழிவுநீர் அதிகளவில் வரத்துவங்கியதால், பூலாவரி பிரிவில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததாலும், ஆற்றில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளாலும், பாலத்தின் நடுவே இருந்த நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விநாயகர் சிலை புதைந்தது. குப்பைகளுக்கு வைத்த தீயின் வெப்பத்தை தாங்காமல், சில மாதங்களுக்கு முன் கல் மண்டபமும் உடைந்து விழுந்தது. அதன் மீதும் குப்பை கொட்டி, 15 அடி வரை கழிவு நிறைந்திருந்தது. இந்நிலையில் அப்பகுதி பக்தர்கள் ஒன்றிணைந்து, ஆற்றுக்குள் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றினர். சிதிலமடைந்த கல் மண்டப துாண்களை அப்புறப்படுத்தி, பெரிய பாறையில் இரண்டடி அளவில் மாடம் போன்ற வடிவில் குடைந்து வழிபட்டு, விநாயகர் புடைப்பு சிற்பத்தை மீட்டுள்ளனர். அதற்கு அபிஷேகம் செய்து, வழிபாட்டுக்கும் கொண்டு வந்துள்ளனர்.