சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
பதிவு செய்த நாள்
27
ஆக 2024 11:08
சென்னை, புறநகர் கிருஷ்ணர் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ணரின் அவதார திருநாள். நாடு முழுதும் இந்நாள், ஹிந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சிலர் நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை, நேற்று பெரும்பாலானோர் கொண்டாடினர். வடமாநிலத்தவர்கள் ஜென்மாஷ்டமியாக கொண்டாடினர். வைணவர்கள் ஸ்ரீ ஜெயந்தியாக கோகுலாஷ்டமியை கொண்டாடுவர். இதன்படி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்கான் கோவிலில் கவர்னர்; சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், மூன்று நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் பிரதான நாளான நேற்று, முக்கிய நிகழ்வாக மஹா அபிஷேகம், ஆரத்தி நடைபெற்றது. திருக்கோலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பகவானை, பக்தர்கள் ஆராதித்தனர். கீர்த்தனைகள் பாடப்பட்டன. பக்தர்கள் பல்வேறு ஆன்மிகப் பொருட்கள், புனித நுால்கள் அடங்கிய பல கண்காட்சி அரங்குகளை அமைத்திருத்தனர். விழாவில், தமிழக கவர்னர் ரவி, தன் குடும்பத்துடன் பங்கேற்று, கிருஷ்ண பகவானுக்கு ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். அவருக்கு இஸ்கான் கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. கோபாலபுரத்தில் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோவில், கவுடியா மடம், மயிலாப்பூர், நந்தலாலா, கோட்டூர்புரம், சாஸ்திரிநகர் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன. சென்னை நகரில் பல வீடுகளில், வீதி முதல் பூஜை அறை வரை, கிருஷ்ணர் கால் பாதம் வைத்து அலங்கரித்தனர். மாலையில் சீடை, அவல், நாவல் உள்ளிட்ட கனி வகைகள், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணெய், பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றை படைத்து வழிபாடு செய்து, அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர். இன்று, அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது. வைணவ சம்பிராயத்தினர் இன்று, ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். –நமது நிருபர் –
|