பதிவு செய்த நாள்
30
ஆக
2024
01:08
மயிலாடுதுறை; தட்சனின் தலையை கொய்து வீரபத்திரர் அவதரித்த திருப்பறியலூர் எனப்படும் பரசலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆதீனங்கள், அமைச்சர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே திருப்பறியலூர் எனப்படும் பரசலூர் கிராமத்தில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளங் கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் கோவில். இந்த கோவில் சிவனுக்கு ஆவிர்பாகம் கொடுக்க மறுத்த தட்சணின் யாகத்தை அழித்து வீரபத்திரர் அவதரித்த இடமாகும். இந்த கோவிலில் வேண்டியதை கொடுக்கும் சமஹன் எனப்படும் மந்திரம் பிறந்த ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக 121 வேத விற்பனர்களைக் கொண்டு 14631 முறை ருத்ர பாராயணம் செய்து ஆகுதி அளிக்கும் மகா ருத்ர அபிஷேகத்திற்கான யாகமும் செய்யப்பட்டது. 6 கால யாக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று பூர்ணாகதியுடன் மகா தீபாராதனை நடைபெற்று கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு, மதுரை ஆதீனம், வேளாகுறிச்சி ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், நாச்சியார் கோவில் ஆதீனம் செங்கோல் ஆதீனம், மயிலம் பொம்மபுர ஆதீனம், நெல்லை ஆதீனம், ஜப்பான் சிவ ஆதீனம் உள்ளிட்ட ஆதினங்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏகள் பூம்புகார் நிவேதா முருகன் மயிலாடுதுறை ராஜகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறையின் உதவியுடன் நடைபெறும் 2000 வது கும்பாபிஷேகம் என்பது குறிப்பிடத்தக்கது.