பதிவு செய்த நாள்
04
செப்
2024
05:09
புதுச்சேரி; புதுச்சேரியில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிவிலில், 10 நாட்களுக்கு நடக்கும், பிரம்மோற்சவ விழா 6ம் தேதி துவங்குகிறது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 53வது பிரம்மோற்சவ விழாவில், சர்வலோக யோக நலத்திற்காக, காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் ேஹாமம் நடக்கிறது. நாள்தோறும் காலை திருமஞ்சனம், வேத பாராயண திவ்ய பிரபந்த சேவை, சாற்றுமுறை, இரவு வேத பாராயண திவ்ய பிரபந்த சேவை, பெருமாள் வாகனங்களில் திரு வீதி புறப்பாடு, கோவிலில் எழுந்தருளியிருக்கும் நவ நரசிம்மர்களில் தினமும் ஒரு நரசிம்மர் புறப்பாடு, திவ்ய நாம பஜனை, சாற்றுமுறை, டோலோற்சவம் நடக்கிறது. வரும், 7ம் தேதி சந்திர பிரபையில் ஜூவால நரசிம்மர்; தொடர்ந்து 8ம் தேதி, சூரிய பிரபையில், அகோபில நரசிம்மர்; அடுத்ததாக, 9ம் தேதி வராக நரசிம்மர் புறப்பாடும் நடக்கிறது. வரும், 10ம் தேதி கருட சேவையில் மாலோல நரசிம்மர்; அடுத்த நாள் ஹனுமந்த வாகனத்தில், பார்கவ நரசிம்மர் புறப்பாடும் நடக்க உள்ளது. 12ம் தேதி யானை வாகனத்தில், காரஞ்ச நரசிம்மர்; அடுத்தநாள் சூர்ணோத்சவ யோகானந்த சத்ரவட நரசிம்மர்; 14ம் தேதி, இந்திர விமானத்தில் பாவன நரசிம்மர் புறப்பாடு நடைபெறுகிறது. வரும், 15ம் தேதி ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரி காலை 9:00 மணியில் இருந்து 10:15 மணிக்குள் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.