பதிவு செய்த நாள்
04
செப்
2024
05:09
பல்லடம்; பல்லடம் அருகே, இச்சிப்பட்டி கிராமத்தில், இரட்டைப் பிள்ளையார் ஒருசேர அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில், தொன்மையான கல்வெட்டுகள், சிலைகள், கோவில்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. எனவே, இந்த கிராமத்தை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இதற்கு உதாரணமாக, இங்குள்ள பல்லடம் - சோமனூர் ரோட்டில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இரட்டைப் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூலவராக இரண்டு பிள்ளையார் ஒருசேர அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.
பழங்கால முறைப்படி கருங்கற்களால் ஆன கருவரை மற்றும் நாயக்கர் காலத்தை பறைசாற்றும் முன் மண்டபத்துடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, நந்தி மற்றும் மூஷிக வாகனம் ஆகிமவை அருகருகே ஒன்றாக அமைந்துள்ளது கூடுதல் சிறப்பம்சம். இதேபோல், கருவறையில், இரட்டைப் பிள்ளையார்கள் அமரந்து அருள்பாளிப்பது எங்குமே இல்லாதது. பிள்ளையாருக்கு அருகில் நாக சிற்பமும், பக்கவாட்டில் நாகதேவி உருவம் கொண்ட சிற்பம் மற்றும் கை கூப்பிய நிலையில் பெண்ணின் சிற்பமும் அமைந்துள்ளன. கருவறையின் பக்கவாட்டு வெளிப்புற சுவர்களில் மீன் மற்றும் நாகன் சிற்பங்கள் காணப்படுகின்றன. முன்னோர்கள் வழிபட்டு வந்த இக்கோவிலை , கடந்த ஏழு ஆண்டுக்கு முன், ஹிந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. கோவில் குறித்து ஆய்வு மேற்கொண்ட பல்லடம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவை சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறுகையில், கோவில் அமைப்பை ஆய்வு செய்ததில், இது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். இரட்டைப் பிள்ளையார், நந்தியுடன் மூஷிகன் என, எந்த கோவிலிலும் இடம் பெறாத அதிசயமாக உள்ளது இக்கோவில். கோவில் கட்டுமானமும், இதிலுள்ள சிற்பங்களும் கோவிலின் பழமையை, நமது பாரம்பரியத்தை எடுத்துக் கூறுகின்றன. முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்த அரிய பொக்கிஷத்தை, புதுப்பித்து பாதுகாத்து வைக்க வேண்டும் என்றார். இச்சிப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள பழமையான இக்கோவிலில், பூசாரி ஒருவர், தினசரி வந்து இரட்டைப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல், அவ்வப்போது பக்தர்கள், பொதுமக்கள் சிலரும் கோவிலில் வழிபட்டு செல்கின்றனர். கோவிலை மீட்டு புதுப்பிப்பவன் மூலம், இருபதாம் நூற்றாண்டில் இரட்டைப் பிள்ளையாரின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.