ஆவணி கடைசி சோமவாரம்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 12:09
கோவை; ஆவணி மாதம் கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதை காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இங்கு ஆவணி மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ருத்ராட்ச மாலை அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.