பதிவு செய்த நாள்
09
செப்
2024
04:09
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவ பெருமாளுக்கு எல்லா ஆவணி மாதமும் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை 9:00 மணிக்கு நடைபெற்றது. மாத்தூர் மடத்தந்திரி சங்கர நாராயணரரு கொடிமர பூஜைகள் செய்து திருக்கொடி ஏற்றினார். விழா நடக்கும் பத்து நாட்களும் தினமும் அதிகாலை திருவேங்கட விண்ணப்ப பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். தினமும் காலை மாலை திருவேங்கட விண்ணப்ப பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வருவார். ஒன்பதாம் நாள் விழாவான செப்., 17 தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மேயர் மகேஷ், தேவசம்போர்டு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.