பதிவு செய்த நாள்
13
செப்
2024
10:09
மேட்டுப்பாளையம்; ஜடையம்பாளையம் ஊராட்சியில் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சியில், எம்.ஜி.ஆர்., நகரில், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம் ஆறாம் தேதியிலிருந்து, எட்டாம் தேதி முடிய அம்மன் படு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் தேதி முனியப்பன் பூஜையும், ஊர் சாந்தி எடுத்தலும் நடந்தது. பத்தாம் தேதி குதிரை வாகனத்தில் மதுரை வீரன் சுவாமியும், சிம்ம வாகனத்தில் அம்மன் சுவாமியும் எழுந்தருளி, வானவேடிக்கையுடன் திருவீதி உலா வந்தது. 11ம் தேதி அம்மன் சக்தி அழைத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு அலங்கார பூஜை செய்தனர். மாலையில் அக்னி கரகமும், அழகு குத்தியும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மன் சுவாமிக்கு படைத்தனர். நேற்று காலை மஞ்சள் நீராட்டும், மறு பூஜையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள், ஊர் தலைவர் ரங்கசாமி, துணைத்தலைவர் ராமன், ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் செய்திருந்தனர்.