ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் காழ்ச்சகுலை சமர்ப்பணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2024 04:09
பாலக்காடு; ஓணம் பண்டிகையையொட்டி குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு காழ்ச்சகுலை சமர்ப்பணம் வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலத்தில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உத்திராடம் நாளான இன்று காலை சிறப்பு காழ்ச்சீவேலி" என்ற செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தங்கக் கொடிமரம் கீழ் பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக, நேந்திரன் பழ கொத்து சமர்ப்பிக்கும் காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல்சாந்தி பள்ளிசேரி மனை மதுசூதன் நம்பூதிரி மூலவருக்கு முதல் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். இதையடுத்து தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், குழு உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், நிர்வாகி வினயன் ஆகியோர் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மூலவருக்கு பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்து வழிபட்டனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பழ கொத்து, திருவோணம் நாளான இன்று நடக்கும் ஓண சத்யா என்ற சிறப்பு அன்னதானத்தில் பழம் பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் பேருக்கு வழங்கும் ஓண சத்யா தயார் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ததாக தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.