பதிவு செய்த நாள்
14
செப்
2024
04:09
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே உள்ள அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், முதல் ஆண்டு தின விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறுமுகை அடுத்த பொகலூர் அருகே தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு, முதல் வருஷ தினவிழா நடந்தது. காலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. ஏக கலஸ ஸ்தபந திருமஞ்சனம், சுதர்ஸன ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. அடுத்து ஆஞ்சநேயருக்கு, புதிய வஸ்த்ரம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவசத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு, அருள் பாலித்தார். அதை தொடர்ந்து, சஹஸ்ர நாம அர்ச்சனை, தளிகை நிவேதனம், ஆரத்தி ஆகிய பூஜைகள் நடந்தன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ராம நாம பஜனையும், ஏகாந்த சேவையும் நடைபெற்றது. விழா மற்றும் பூஜை ஏற்பாடுகளை தாஸன் ரிஷி பட்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.