நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2024 12:09
நாகை ; நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட, அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில், பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9,ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதற்காக 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இன்று காலை 6,ம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி தீபாரதனை முடிவுற்றதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது மல்லாரி ராகம் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முத்து மாரியம்மன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களின் மேல் ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.15,ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வேண்டி, தரிசனம் செய்தனர்.