அவிநாசி; அவிநாசி வட்டம், ராயர்பாளையத்தில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருநெறிய தமிழ்த்திருக்குட கும்பாபிஷேக விழா நேற்று கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அவிநாசி திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேகத்திற்காக கடந்த 13ம் தேதி ஐங்கரப் பெருமான் வேள்வி, தீர்த்தங்கள் எடுத்து வருதல், 108 வகை காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் ஆகியவற்றுடன் முதல் கால வேள்வி பூஜைகள் நடந்தன. விமான கலசம் வைத்தல், திருப்பள்ளியெழுச்சி, அடியார்கள் வழிபாட்டுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால கேள்வி பூஜைகள் நடந்தன. நான்காம் கால வேள்வி பூஜைகளில் விமான கலசங்களுக்கும், மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேக விழா நடந்தது. மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. கோவில் விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.