பதிவு செய்த நாள்
16
செப்
2024
10:09
திருப்பூர்; அவிநாசி, கணியாம்பூண்டியில் அமைந்துள்ள, ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள், ஸ்ரீவிஷ்வக்ேஸனர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுதர்ஸனர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழா பூஜைகள், 13ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடு, லட்சுமி குபேர ேஹாமத்துடன் துவங்கியது. புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் விமரிசையாக நடந்தது.யாகசாலையில், மூன்றுகால வேள்வி பூஜைகளை, கோவை சப்தரிஷி ஜோதிட ஆராய்ச்சி நிலைய அர்ச்சகர் ரமேஷ் சேஷாத்திரி அய்யங்கார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன; வேள்வி நிறைவு பெற்று, திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டன. காலை, 6:14 மணிக்கு மேல், 8:14 மணிக்குள், கருவறை விமானம், கோபுரங்கள், மூலாலய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தாடிக்கொம்பு ஸ்ரீரவி சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை, மகாதீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.