நாகை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை கொண்டு வந்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2024 12:09
நாகப்பட்டினம்; நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்ற அக்கரைப்பேட்டை .முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், முஸ்லிம்கள்,ஆலயமணி வழங்கி சீர்வரிசையுடன் பங்கேற்றனர். நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகையில் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ளது மிக பழமையான முத்துமாரியம்மன் கோவில் இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த 9 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.12 ம் தேதி, 9 புன்னிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு பின் கொண்டு செல்லப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் நிறைவுற்று கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து முத்து மாரியம்மன் சன்னதி மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கல்லார் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்து,3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆலய மணி மற்றும் பல்வேறு மங்கள பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.