பதிவு செய்த நாள்
17
செப்
2024
12:09
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார், திரிபுரசுந்தரி அம்பிகா சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருமுறைகள் தில்லை நடராஜர் திருக்கோவிலில் இருந்து வெளி உலகிற்கு வருவதற்கும், சைவம் தழைக்கவும், 11 திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி மூலம் தொகுத்து வழங்க காரணமாக இருந்த சிறப்பு வாய்ந்த திருத்தலம் திருநாரையூர் ஆகும். இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 9ம் தேதி கும்பாபிேஷக பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விமான கோபுர கலசங்கள் பிரதிஷ்டை, வேத பாராயணம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால பூஜைகள் துவங்கி யாக வேள்வி திருமுறை பாராயணம் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு 6ம் கால யாக பூஜை நடந்தது. 8:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. தருமபுர ஆதினம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனி நீர், ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு கருவறையில் வீற்றிருக்கும் பொல்லாப்பிள்ளையார், திருபுரசுந்தரி அம்பிகா சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், குமராட்சி ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன், பொறியாளர் கார்த்திகேயன், விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், திருநாரையூர் ஊராட்சி தலைவர் வாசுகி சோழன் , திருப்பனந்தாள் காசிமடம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.