பதிவு செய்த நாள்
19
செப்
2024
12:09
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற, குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சிக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. ‘தினமலர்’ மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழும், ‘வேலம்மாள் நியூஜென் கிட்ஸ்’சும் இணைந்து வழங்கும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
வித்யாரம்பம்; குழந்தையின் கையால், நெல் மணியில் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது விஜயதசமி நாளில் தான். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின், ‘அ’கரத்தை துவக்கி வைக்க உள்ளனர். சென்னை படப்பை, வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், நாவலுார் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூரப்பேட் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய ஐந்து இடங்களில், அக்., 12, காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்க உள்ளது.
புகைப்பட சான்றிதழ்; நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல், மூன்றரை வயது உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி உள்ளது. முன்பதிவு செய்ய, இந்த செய்தியில் உள்ள கியூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, அதில் உங்களுக்கு அருகில் உள்ள பகுதியை தேர்வு செய்து, குழந்தை குறித்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள ‘லேர்னிங் கிட்’ மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யவும்’.