பதிவு செய்த நாள்
20
செப்
2024
10:09
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. சுயம்புவாக சனீஸ்வரபகவான் எழுந்தருளியுள்ள தலமாகும். தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று இங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வருவார்கள். ஆடிப் பெருந் திருவிழாவில் சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம் ஹைலைட்டான நிகழ்ச்சியாகும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த திருக்கல்யாணத்தை தரிசிக்க திரள்வார்கள். மூன்றாவது சனிக்கிழமை பெருந் திருவிழாவாக கொண்டாடப்படும்.
இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த ஊரில் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாகும். சுரபி நதியில் நீராடி, கரையில் உள்ள விநாயகரை தரிசித்து பின் சனீஸ்வரரை தரிசிப்பார்கள். அந்த சுரபி நதி மாசுபட்டுள்ளது. பக்தர்கள் குளித்து விட்டு, விட்டுச் செல்லும் உடைகள் மற்றும் கழிவுப் பொருங்கள் தண்ணீரில் மிதக்கும். கரையோரத்தில் மொட்டை போடுவது, காக்கை வாகனம் வாங்கி வைப்பது, விளக்கு போடுவது போன்றவற்றிற்கு போதிய வசதிகள் இல்லை. பெண் பக்தர்கள் குளித்து விட்டு உடை மாற்ற அறைகள் இல்லை. நீண்ட தூர ஊர்களில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இயற்கை உபாதைகளை போக்க போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. தரிசனம் முடிப்பதற்கு முன்னும், தரிசனம் முடிந்த பின்னும் பல சிரமங்களை வெளியூர் பக்தர்கள் சந்திக்க வேண்டி உள்ளது. கோயில் வளாகத்திலிருந்து இருந்து சுரபி நதிக்கரையை அடைய அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளது. வருவாயை அனுபவிக்கும் ஹிந்து சமய அறநிலைய துறை அல்லது பேரூராட்சி நிர்வாகம் வசதிகள் செய்து தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.