பதிவு செய்த நாள்
20
செப்
2024
01:09
திருநெல்வேலி; நெல்லை ஜங்ஷன், பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 2ம் தேதி முதல் வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பூஜை நடக்கவுள்ளது. கொலு பொம்மைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். நெல்லையில் பல்வேறு கடைகள், விற்பனை நிலையங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. நெல்லை ஜங்ஷன், பூம்புகார் விற்பனை நிலையத்தில் அம்மன்கள், இதர தெய்வங்களின் பொம்மைகள், குபேரன், பெண் பார்க்கும் செட், முருகன், வள்ளி, தெய்வானை செட், அய்யப்பன் பூஜை செட், அஷ்டலட்சுமி, தசாவதாரம் செட்கள், ராமர் பட்டாபிஷேகம், திருநாவுக்கரசு செட் உட்பட 45 செட் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த சில நாட்களாக பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது. அயோத்தி குழந்தைராமர் சிலைகளை பலர் விரும்பி வாங்குகின்றனர். மேலாளர் சுடலைமுத்து கூறிய போது, ‘’ரூ, 300 முதல் ௬ ஆயிரம் வரை விலை நிர்ணயித்து கொலு பொம்மைகள் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிய வரவாக அயோத்தி குழந்தை ராமர் சிலைகள் வந்துள்ளன. 3 அடி உயரத்தில் பேப்பர் கூழ் மூலம் செய்யப்பட்ட அயோத்தி ராமர் சிலை ரூ. 4,300, மண்ணில் செய்யப்பட்ட அதே சிலை ரூ. 2,200க்கு விற்கப்படுகிறது. இந்த சிலைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன” என்றார்.