பதிவு செய்த நாள்
30
செப்
2024
05:09
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே ஸ்ரீ ராமர் உருவாக்கிய வில்லூண்டி தீர்த்த பாலம் சேதமடைந்து உள்ளதால், பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமாயண வரலாற்றில் இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ஸ்ரீ ராமர், லட்சுமணர், அனுமான் மற்றும் படைகளுடன் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்திறங்கினர். பின் அயோத்திக்கு செல்ல இருந்த நிலையில், சீதைக்கு தாகம் எடுத்தது. அப்போது ராமேஸ்வரம் தீவு பகுதி அடர்ந்த காடு என்பதால் குடிநீர் எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடலில் ராமர் வில்லில் அம்பு எய்தினார். அந்த அம்பு கடலுக்குள் குத்தியவுடன் நல்லதண்ணீர் மேலே பீறிட்டு வந்தது. இந்நீரை சீதை மற்றும் வானர சேனைகள் பருகி தாகம் தனித்ததாக கூறப்படுகிறது. அன்று முதல் இந்த இடம் தண்ணீர் ஊற்று எனவும், ராமரின் வில் அம்பில் உருவான இந்நீரை வில்லூண்டி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த புனித தீர்த்தம் ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் தங்கச்சிமடம் ஊராட்சி தண்ணீர்ஊற்று கிராமம் கடற்கரையில் இருந்து 100 மீ., தூரத்தில் கடலுக்குள் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கிருந்து ஆட்டோவில் சென்று புனித நீரை பருகி தரிசனம் செய்கின்றனர். 2008ல் இந்த பாலம் முழுவதும் சேதமடைந்த நிலையில், 2011ல் மாவட்ட நிர்வாகம் புதிய பாலம் அமைத்து, பக்தர்கள் எளிதாக சென்று வந்தனர். ஆனால் காலப்போக்கில் பாலம் பராமரிப்பு இன்றி சிமெண்ட் தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கிறது.
ஆபத்து அபாயம்; சேதமடைந்த தடுப்பு சுவர்களில் உள்ளூர் பக்தர்கள் கம்புகளை கட்டி பராமரித்து வருகின்றனர். சேதமடைந்த தடுப்பு சுவரை சரி செய்ய பக்தர்கள் பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் புனித நீரை பருகச் செல்லும் பக்தர்கள், சேதமடைந்த தடுப்பு சுவர் வழியாக கடலில் இடறி விழுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வரலாற்று நினைவுச் சின்னமாக விளங்கும் இத்தீர்த்தத்தின் தடுப்பு சுவரை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.