பதிவு செய்த நாள்
01
அக்
2024
12:10
பொதுவாக கோவில்களை ஹிந்து மதத்தவர் கட்டுவது வழக்கம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவர் அற்புதமான நந்தி கோவிலை கட்டியுள்ளார். பெலகாவி, அதானியின் கிளேகாவி கிராமத்தில் கலை நயத்துடன் கூடிய நந்தி கோவில் உள்ளது. இது முஸ்லிம் வாஸ்து பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதனை அன்றைய பிஜாப்பூரின் ஆதில் ஷா என்ற மன்னர் கட்டினார். முஸ்லிம் மன்னர் ஹிந்து கோவிலை கட்ட, ஒரு காரணமும் உள்ளது.
குலத்தொழில்; மஹாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள, பெலகாவி அதானியின் கிளேகாவி கிராமத்தில் சிவ பக்தர் டவளப்பஜ்ஜாவும், அவரது மனைவி சிவம்மாவும் வசித்தனர். விவசாயம் செய்வதும், பசுக்களை பராமரிப்பதும் இவர்களின் குலத்தொழிலாக இருந்தது. ஒருநாள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த டவளப்பஜ்ஜாவுக்கு, ஒரு கனவு வந்தது. ‘புற்றில் நந்தி விக்ரஹம் உள்ளது. அதை வெளியே எடு’ என, உத்தரவிட்டது. அன்று காலையில் எழுந்த அவர், குளித்து முடித்த பின் புற்றை கண்டுபிடித்து தோண்டி பார்த்த போது, கனவில் வந்தது போன்று, நந்தி விக்ரஹம் தென்பட்டது. அதை வீட்டுக்கு கொண்டு வந்த டவளப்பஜ்ஜா தம்பதி, தினமும் பக்தியுடன் பூஜிக்க துவங்கினர்.
பக்தர்கள் அதிகரிப்பு; புற்றில் நந்தி விக்ரஹம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவி, கிராமத்தினர் விக்ரஹத்தை தரிசனம் செய்தனர். நாட்கள் செல்ல செல்ல, பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து லட்சமாக அதிகரித்தது. இந்த தகவல் அன்றைய பிஜாப்பூர் சுல்தான் ஆதில் ஷா காதுகளை எட்டியது. ஒருநாள் தன் படைகளுடன் கிளேகாவி கிராமத்துக்கு வந்தார். நந்தி விக்ரஹம் முன்பாக மாமிசத்தை வைத்து, ஆயுதத்தால் விக்ரஹத்தை குத்தி அவமதித்தார். இதை பார்த்து டவளப்பஜ்ஜாவும், கிராமத்தினரும் வருந்தினர்; செய்வதறியாது நின்றனர். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. சுல்தான் ஆதில் ஷா வைத்திருந்த மாமிசம் பூக்களாக மாறியது. இதில் இருந்து வெளியேறிய தேனீக்கள், சுல்தானையும், அவரது படைகளையும் தாக்கியது. இதில் சுல்தானின் பார்வை பறிபோனது. தவறை உணர்ந்த சுல்தான், மன்னிப்பு கேட்டு நந்தி கடவுளிடம் சரண் அடைந்தார். நந்திக்கு அற்புதமான கோவில் கட்டினார். தினமும் பக்தியுடன் பூஜித்து வந்தார். முஸ்லிம் வாஸ்து பாணியில், இக்கோவில், 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இப்போதும் பழமை மாறாமல், பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது.
வாகன வசதி; அதானியில் இருந்து கிளேகாவி கிராமத்துக்கு பஸ் வசதி, தனியார் வாகன வசதி உள்ளது. அமைதியான சூழலில் அமைந்துள்ள கோவிலை தரிசிக்க, பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். – நமது நிருபர் –