பதிவு செய்த நாள்
01
அக்
2024
12:10
ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். அங்கு இருந்து சீதையை மீட்டு வர ராமனுக்கு, பெரும் உதவியாக இருந்தவர் ஹனுமன். ராமன் கோவில் இருக்கும் இடங்களில் ஹனுமனும் இருப்பார். ஹனுமனுக்கு தனி கோவில்களும் உள்ளன. பெங்களூரு பனசங்கரி கடவந்திரா 1வது சதுக்கம் கிரிநகரில், காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 41 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தேங்காய் வாங்கிக் கொடுத்து, ஹனுமனை தரிசித்தால், தங்கள் மனதில் பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் தேங்காய் விற்பனை கடை உள்ளது. சிறப்பு தேங்காய் நுாறு ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். அந்த தேங்காயின் மீது முத்திரையிடப்பட்ட எண், உங்கள் பெயர் கொண்ட ரசீது வழங்கப்படும். அந்த தேங்காயை எடுத்துச் சென்று, ஹனுமன் முன்பு அமர்ந்து பக்தர்கள் மனதில் நினைப்பதை வேண்டிக் கொள்ள வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்பு, கோவிலின் வெளிப்புற பகுதியில் தேங்காய்களை துணியில் கட்டுவதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கு சென்று தேங்காயை கட்ட வேண்டும். பின், ஆரஞ்சு நிற கயிறு, கையில் கட்டுவதற்கு வழங்கப்படும். 16 நாட்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதினாறாவது நாள் கோவிலுக்கு சென்று, உங்களது தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த நடைமுறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கோவிலின் அர்ச்சகர்களிடம் கேட்கலாம். அவர்கள் பொறுமையாக விளக்கம் அளிப்பர். ஆஞ்சநேயரின் ஆசிர்வாதத்துடன் பக்தர்களின் எண்ணங்கள் நிறைவேறட்டும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். -– நமது நிருபர் – -