பதிவு செய்த நாள்
03
அக்
2024
12:10
பரமக்குடி; பரமக்குடியில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பூஜை இன்று முதல் துவங்கும் நிலையில், வீடு மற்றும் கோயில்களில் பல நிலைகளில் பொம்மைகளை அடுக்கி வைத்துள்ளனர். அக்., 3 தொடங்கி 11 வரை நவராத்திரி விழா நடக்கிறது. அக்., 12 மகிஷாசுரனை வதம் செய்யும் விஜயதசமி நாளாகும். நேற்று கோயில்கள் மற்றும் வீடுகளில் 3 முதல் 5, 7, 9, 11 என்ற அடிப்படையில் கொலு படிகளை அமைத்து பொம்மைகளை அழகு படுத்தினர். இதன்படி ஒரு செல் உயிரி தொடங்கி தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், பிரபஞ்சம் மற்றும் தெய்வ நிலை குறித்து காட்சிப்படுத்தி உள்ளனர். அப்போது 9 நாட்களை மூன்றாகப் பிரித்து துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வழிபடுவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூ, நெய்வேத்தியம் படைக்கப்பட்டு, பாடல்கள், நடனம் என பெண்கள் ஆடிப்பாடி மகிழ்வர். மேலும் பரமக்குடியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் தாயார் உள்ளிட்டோருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து உபன்யாசங்கள், பஜனை, கோலாட்டம் என கோலாகலமாக நடக்க உள்ளது. 10ம் நாளான அக்., 12 கடைசி புரட்டாசி சனிவார நாளில் பல்வேறு கோயில்களில் மகிஷாசுரனை வதம் செய்ய அம்பு எய்தும் விழா நடக்க உள்ளது.