பதிவு செய்த நாள்
03
அக்
2024
12:10
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட இலக்கியவாதி நாகராஜய்யா துவக்கி வைத்தார்.
உலக பிரசித்தி பெற்ற, 414வது மைசூரு தசரா விழா இன்று கோலாகலமாக துவங்கியது. தசரா பண்டிகை மற்றும் அது தொடர்பான விழாக்கள் துவங்குவதை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நகரில் குவிந்துள்ளனர். மைசூரை ஆண்ட உடையார் மன்னர் வம்சத்தினர், 1610ல் முதல் முறையாக தசரா விழா கொண்டாடினர். மன்னர்கள் ஆண்ட காலங்களில், அவர்களையே தங்க அம்பாரியில் அமர வைத்து ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது. மன்னர் ஆட்சி முடிந்த பின், சாமுண்டீஸ்வரி தேவி சிலையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.ஆண்டுதோறும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 10வது நாளான விஜயதசமி அன்று, ஜம்பு சவாரி எனப்படும் யானைகளின் பாரம்பரிய ஊர்வலம் நடக்கும்.அந்த வகையில், 414வது தசரா விழாவை, கன்னட இலக்கியவாதி நாகராஜய்யா இன்று காலை, சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.