பதிவு செய்த நாள்
07
அக்
2024
03:10
திருப்பதி; ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடைகள் இன்று திருப்பதி வந்தது. திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி செய்து தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அக்.2 துவங்கியது. ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம், மடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் 50வது பட்டம் (வர்த்தமான ஸ்வாமி) ஆசி வழங்கி தொடங்கி வைத்தார். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து அக்.2ம் தேதி காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, அக்.3ம் தேதி சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்த திருக்குடை ஊர்வலம் இன்று (அக்.7ம் தேதி) திருமலை சென்றடைந்தது. திருக்குடைகள் ஏழுமலையான் கோயில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேங்கடமுடையானுக்கான வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி, நிர்வாக அறங்காவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரவேற்றார்.