தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கோயிலில் மராமத்து பணிகள் செய்தும் கடந்த ஆக. 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவிற்காக தினந்தோறும் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மண்டலாபிஷேக விழாவிற்கான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின.இதனைத் தொடர்ந்து ஹோமம் வளர்த்து 108 கலசாபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. வியாபாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், விழா கமிட்டி நிர்வாகிகள் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், தாயமங்கலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அய்யாச்சாமி, தாயமங்கலம் ஊராட்சி தலைவர் மலைராஜ், அம்மாசி (எ) முத்து,காரைக்குடி குமாரவேல், மதுரை செந்தில்நாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.