பதிவு செய்த நாள்
23
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் கார்த்திகை மகா தீபத்தின் போது, தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், "மதுரை காந்தி கிராம் நிறுவனத்தில் இருந்து வந்தது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 18ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. நேற்று, ஐந்தாம் திருவிழா நடந்தது. நாளை, தேரோட்டமும், வரும், 27ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது, மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்கு பயன்படுத்த, "மதுரை காந்தி கிராம் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ தூய நெய் கொள்முதல் செய்யப்பட்டு, 235 டின்களில் அடைக்கப்பட்டு, அருணாசலேசுவரர் கோவிலுக்கு வந்தடைந்தன. பக்தர்களிடம் இருந்து, நெய் காணிக்கையும் பெறப்படுகின்றன. நெய் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் கொடிமரம் அருகே சிறப்பு, "கவுன்டர் திறக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோ நெய், 200 ரூபாய், அரை கிலோ, 100, கால் கிலோ, 50 ரூபாய் என, காணிக்கை செலுத்தலாம். மகா தீபம் ஏற்றுவதற்கு நெய், வரும், 27ம் தேதி காலை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மகா தீபம் தொடர்ந்து, 11 நாள் எரியும். தீபம் ஏற்ற பயன்படுத்த, 1,000 மீட்டர் காடா துணி, இன்று, திருப்பூரிலிருந்து கொண்டு வரப்படுகிறது.