பதிவு செய்த நாள்
23
நவ
2012
10:11
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை பாரம்பரிய சின்னம் என, அத்துறை வெளியிட்ட, கையேட்டில் இடம் பெற்றுள்ளது. பல்லவர் கால பாரம்பரிய சிற்பக்கலைக்கு, மாமல்லபுரம் புகழ் பெற்றது. இங்கு கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம் உட்பட பல்வேறு குடைவரை மண்டபங்கள் என, 35 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. உலக அளவில், பாறையில் செதுக்கல், புடைத்தல், குடைதல், கட்டுமானம் போன்ற வெவ்வேறு வகை சிற்பக்கலைகள், ஒரே இடத்தில் அமைந்த சிறப்பை, இந்நகரம் பெற்றுள்ளது. இச்சின்னங்களை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, பாதுகாத்து பராமரிக்கிறது. இங்குள்ள அர்ச்சுனன் தபசு பாரம்பரிய வளாகம் அருகில், விஜயநகர அரசு காலத்தைச் சேர்ந்த, ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அர்ச்சுனன் தபசு வளாகம், தொல்பொருள் துறையிடம் முறையான பராமரிப்பில் இருக்க, கோவில் வளாகமோ, சிறுநீர் கழிப்பிடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி, மிக மோசமாக சீரழிகிறது. எனவே, கோவிலையும் கையகப்படுத்தி பராமரிக்க, தொல்பொருள் துறை முடிவெடுத்தது. இத்துறை கோவிலையும் கையகப்படுத்தினால், சுற்றுப்புற வர்த்தகக் கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதி, இந்நடவடிக்கையை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, இத்துறை வல்லுனர்களைக் கொண்ட குழுவினர், பொதுமக்களின் கருத்தையும் அறிந்தனர். ஆனால், இறுதி முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இக்கோவில் பாரம்பரியம் காக்க, "தினமலர் இதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. தற்போது இத்துறை வெளியிட்டுள்ள கையேட்டில், இக்கோவிலும் பாரம்பரிய சின்னமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், அதன் சிறப்பு ஆகியவற்றை, சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள, இத்துறை கையேடு உதவும் என்று கூறப்பட்டது. இதற்கு முன் வெளியிட்ட கையேடுகளில், பாரம்பரிய சின்னம் பட்டியலில், ஸ்தலசயன பெருமாள் கோவில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.