நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2024 10:10
திருநெல்வேலி; நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று அதிகாலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதியம்பாள் திருக்கல்யாணம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. பிரம்ம முகூா்த்தத்தில் மைத்துனராகிய நெல்லை கோவிந்தர் தாரை வாா்த்துக் கொடுக்க நடைபெற்ற திருமணத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தின் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லைப்பர் காந்திமதியம்பாள் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர் 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து 15 நாட்கள் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் கோவில் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்றைய தினம் நடந்தது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11வது நாள் திருவிழாவான அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் மணிக்கு காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் நெல்லை கோவிந்தர் சுவாமி நெல்லையப்பரை ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்து சுவாமிக்கு அம்பாளை தாரைவார்த்துக் கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
அம்பாள் சன்னதிக்கு அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்மமுகூர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்களுடன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் பிரகாரத்தில் பக்தர்கள் பேரவை சார்பில் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் கல்யாண வைபவத்தில் பங்கேற்று உணவருந்தி சுவாமி தரிசனம் செய்து சென்றனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளில் பட்டிண பிரவேச நிகழ்ச்சியும் மாலையில் அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சுவாமி - அம்பாளுக்கு மனிதர்களின் திருமண விழாக்களில் நடைபெறும் நலுங்கு நிகழ்ச்சியும் நடைபெறும். இறுதியாக 1ம் தேதி மறுவீடு பட்டின பிரவேச நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.