பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், டிச., 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கடந்த, 2010ம் ஆண்டு டிச., மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிேஷகம் நிறைவடைந்து, 14 ஆண்டுகள் ஆனதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. 65 அடி உயரமுள்ள ராஜகோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சிலைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: கோவிலில், மொத்தம், 2 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழா வரும் டிச., 12ம் தேதி காலை, 9:00 முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கிறது. விழாவில், நான்கு லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான வசதிகளை செய்வதற்காக, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார். கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.