பதிவு செய்த நாள்
31
அக்
2024
02:10
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் நடந்து வரும் கோலாகலமான தீபாவளிக் கொண்டாட்டம், பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, மிக பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கோவிலில் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்குப் பிறகு, முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீபோத்ஸவம், லேசர் லைட் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சரயு நதிக்கரை முழுவதும், லட்சக்கணக்கில் தீப விளக்கேற்றும் தீபோத்ஸவம் நடந்து வருகிறது.
கடந்த முறை நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியாக, இன்று மாலை முதலே 55 நதியின் படித்துறைகளில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, 10வது படித்துறைகளில் 80 ஆயிரம் விளக்குகளைப் பயன்படுத்தி, ஸ்வஸ்திக் சின்னம் போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோல, அம்மாநில கால்நடைத்துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட, மாசுபாட்டை ஏற்படுத்தாத 1,50,000 லட்சம் கவ் தீபங்களும் ஒளிரவிடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
அதேபோல, மாநில தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் லேசர் ஒளி ஒலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உத்தரபிரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களால் ராம் லீலா நாடகம் நடத்தப்பட்டது. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளின் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.