பதிவு செய்த நாள்
31
அக்
2024
02:10
சென்னை:நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் கிடைக்கும். கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும், என, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று தரிசனம் செய்த, சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், சென்னையில் விஜய யாத்திரைக்காக வந்துள்ளார். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில் தங்கி, ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அங்கு நேற்று காலை, 8:00 மணிக்கு வேத பண்டிதர்களின் சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது. இதில், சிருங்கேரி சன்னிதானம் பங்கேற்றார். அதை தொடர்ந்து பாத பூஜை நடந்தது. நேற்று மாலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சென்ற சன்னிதானத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் அவர் பூஜைகள் செய்தார்.
பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, சன்னிதானம் பேசியதாவது: ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீகற்காம்பாள் கோவிலில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இகோவிலில் சுவாமி, அம்பாள் பரிவாரத்துடன் நந்தி, சிங்கம், மயில், எலி படங்களும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று எதிரியாக இருக்கும் விலங்குகள். ஆனாலும், ஒற்றுமையாக இறைவனுக்கு சேவை செய்வதை பார்க்கிறோம்.
என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுவும், இறை வழிபாடு போன்ற நல்ல செயல்கள் செய்யும்போது, ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி ஒற்றுமையுடன் நல்ல செயல்கள் செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும்; அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி நடக்க வேண்டும். சாஸ்திரத்தில் இல்லாததை செய்வது அதர்மம். எனக்கு மட்டும் கடவுள் ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார் என, பலரும் கேள்வி கேட்பதை பார்க்கிறோம். கடவுள் தண்ணீர் போல என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். விஷ மரம் வளரவும், மா மரம் வளரவும் தண்ணீரே தேவை. நமக்கு என்ன மரம் தேவையோ, அந்த மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். விஷ மரத்தை வளர்த்து விட்டு, பழியை தண்ணீர் மீது போட முடியாது. அதுபோல, நம் வாழ்வில் நல்லது நடப்பதும், தீமைகள் வந்து சேருவதும், நாம் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே உள்ளது.
நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் கிடைக்கும். கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். தர்மத்தை கடைப்பிடிப்பதில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை சோதிக்க, கடவுள் வைக்கும் தேர்வே கஷ்டங்கள். எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி கிடைக்கும் வரை உறுதியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். பூமிக்கு, 20 அடியில் தண்ணீர் இருக்கும்போது, 18 அடி வரை கஷ்டப்பட்டு தோண்டிவிட்டு விரக்தியில் நிறுத்திவிட்டால் பலன் கிடைக்காது. முயற்சியை நிறுத்தாமல் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். இவ்வாறு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை வழங்கினார்.
இன்று ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் ஜெயந்தி
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் கிளை மடங்கள், கோவில்கள், தியான மண்டபங்கள், திருமண மண்டபங்கள், வேத பாடசாலைகள், கோசாலைகள் போன்றவை இன்று இந்த அளவுக்கு நாடெங்கும் பரவலாக இருப்பதற்கு, 35 வது பீடாதிபதியான ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் முக்கிய காரணம். நல ஆண்டு, ஐப்பசி மாதம், கிருஷ்ண சதுர்த்தி, தீபாவளி நாளில், 13.11.1917ல் பிறந்தார். இவருக்கு தந்தை வைத்த பெயர் சீனிவாசன்.
கடந்த, 1931 மே 22ல், 14 வயது பாலகன் சீனிவாசனுக்கு, ஸ்ரீ சந்திரசேகர பாரதீ சுவாமிகள், ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்தர் என்ற தீக் ஷா நாமத்தை சூட்டினார். கருணை, அன்பு, அறிவு ஆற்றல் பொருந்திய சான்றோராக விளங்கிய மகானான அவர், இந்தியா மட்டுமின்றி, நேபாளத்திலும், விஜய யாத்திரை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை நிகழ்த்தி, மக்களை தர்ம மார்க்கத்தில் செல்ல துாண்டினார்.
இவர், 1974ல் தன் வாரிசாக ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகளை நியமித்தார். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், 35 ஆண்டுகள் அருளாட்சி செய்த அபிநல வித்யா தீர்த்த சுவாமிகள், 1989ல் சித்தியடைந்தார். அவரது ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில், இன்று சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்கிறார்.
இன்று 31.10.2024 வியாழக்கிழமை
காலை 8:00 சகஸ்ர சண்டி பாராயணம்
காலை 10:30 தரிசனம், பாத பூஜை
மாலை 4:30 பஜனை
மாலை 6:00 ஜகத்குரு ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் ஜெயந்தி -சிறப்பு கூட்டம்
இரவு 7:30 சங்கீத சமர்ப்பணம்
இரவு 8:30 ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை