பதிவு செய்த நாள்
31
அக்
2024
02:10
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.
தீபாவளி நாளில் நீர்நிலைகளில் கங்கையும், புத்தாடை, அணிமணிகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும் உறைகிறார்கள். இனிப்புப் பலகாரங்களில் அமிர்தம் நிறைகிறது. மலர்களில் யோகினிகள் வசிக்கிறார்கள். தீபத்தின் சுடரில் பரமாத்மாவும், பட்டாசுகளின் தீப்பொறியில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள். எனவேதான் தீபாவளித் திருநாளில் எல்லா தெய்வங்களின் அருளையும் பெறும் விதமாக, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மலர்களால் இறைவனை அலங்கரித்து, தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டு, பலகாரங்களை நிவேதனம் செய்து உண்டு, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளி நாளில்தான் திருப்பாற்கடலில் மகாலட்சுமி அவதரிததாள். அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் வீடுகளில் நெய் கொண்டு தீபங்கள் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் அவளது அருள் எளிதல் கிடைத்து செல்வச் செழிப்பு மேலோங்கும் என்கிறார்கள். வட மாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளி அன்று ரங்கோலி எனப்படும் வண்ணக் கோலமிட்டு தங்கள் வீட்டு முற்றத்தை அலங்கரிக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, காவி ஆகிய மூன்று நிறங்களை கொண்டதாக இந்த கோலம் அமைகிறது. இப்படி கோலம் இடுவதால் மகாலட்சுமி தங்கள் வீட்டில் குடியேறி வாசம் செய்வாள் என்று நம்புகிறார்கள். அன்னபூரணியை வழிபட்டு புத்தாடை அணிவது சிறப்பு. குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ விருத்திக்கு வழிவகுக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட வற்றாத செல்வம் வீட்டில் தங்கும். இன்றோடு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர இறைவனை பிராத்திப்போம்..!