பதிவு செய்த நாள்
05
நவ
2024
04:11
பெண்ணாடம்; பெண்ணாடம் கோவில் அம்மன், விநாயகர் தேர் திருப்பணியை ரூ. 98.20 லட்சத்தில், அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். பல ஆண்டு கனவு நிறைவேறியதாக பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில், பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அத்துடன் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம், நால்வர் குருபூஜை, அப்பருக்கு அம்பாள் காட்சியளித்து ரிஷப முத்திரை, சூல முத்திரை வழங்கிய ஐதீக நிகழ்ச்சி, ஆவணியில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இங்குள்ள, மூலவர் பிரளயகாலேஸ்வரருக்கு ‘கை வழங்கீசன்’ என்ற பெயரும் உள்ளதால் கை, கால் உபாதை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் நோய் நிவர்த்தியாகும் என்ற ஐதீகம் உள்ளது.
இக்கோவில் கடந்த 2006ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. 2018 ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால் அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிேஷகத்திற்கு பாலாலய பூஜை நடத்தாததால் கோபுரத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து சிலைகள், சுவர்கள் சேதமடைந்து கோபுரங்கள் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு மே மாதம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு கோவில் நிதி ரூ.39.53 லட்சம் மற்றும் உபயதாரர் நிதி ரூ.43.91 லட்சம் என, மொத்தம் ரூ.83.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணியை அமைச்சர் கணேசன், தருமபுர ஆதீனம் திருபுவனம் கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தனர். திருப்பணியும் முடியும் நிலையில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக மூலவர், அம்மன், விநாயகர் ஆகிய 3 தேர்கள் இருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 3 தேர்களும் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. இதனால் பல ஆண்டுகள் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2010ல் மூலவர் தேர் மட்டும் புதிதாக அமைத்து, விழா நடந்தது. தற்போத கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி நடந்து வருவதால் தேர் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கிராம மக்கள், பக்தர்கள் அம்மன் தேர் மற்றும் விநாயகர் தேர் அமைக்க கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன் அம்மன் தேருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பொதுநல நிதி 28 லட்சத்து 30 ஆயிரம், கோவில் நிதி 28.30 ஆயிரம்; விநாயகர் தேருக்கு ஆணையர் பொதுநல நிதி 25 லட்சம், கோவில் நிதி 16 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான திருப்பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார். அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் செயல் அலுவலர் மகாதேவி, ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.