பதிவு செய்த நாள்
06
நவ
2024
05:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் 30 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாத முதல் நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி, கடைமுறை தீர்த்தவாரி பிரசித்தி பெற்றவை. கடைமுக தீர்த்தவாரிக்கு 10 நாட்கள் முன்பாக இக்கோவிலில் துலா உற்சவ கொடியேற்றம் நடத்தப்படும். ஐப்பசி கடைசி 10 நாள் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் இன்று துலா உற்சவ கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி ரிஷப கோடி கோவிலில் 4 வீதிகளையும் வலம் வந்து கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் முன்பு எழுந்தருள திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் நான்கு பிரகாரங்களிலும் கொடியேற்றப்பட்டது. இதில் சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி அவர்களுடன் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள, தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் செய்து வைக்கப்பட்டது. இதில் அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திரன் சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தெப்பக்குளம் காசி விஸ்வநாதர், மார்க்கெட் காசி விசுவநாதர் கோவில்களில் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.